புதுக்கோட்டை அருகே படகு சவாரி சென்ற இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே படகு சவாரி சென்ற இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் ஐயப்பன் (19) இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதே பகுதியில் உள்ள தனது நண்பர்கள் ஜெயசீலன் (19), பாலு (15) சஞ்சய்குமார் (20), நாகலிங்கம் (19),ஜோதிமணி (19), ஹரிஹரசுதன் (20) ஆகியோருடன் கடற்கரைக்கு செல்லலாம் என முடிவு செய்தனர்.
இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆர்புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில் உள்ள நண்பர் நந்தலாலா (20) என்பவரை சந்தித்துள்ளனர். பின்னர், கணேசன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் கடலில் சவாரி செய்துள்ளனர்.
சுமார் இரண்டு நாட்டிக்கல் தொலைவில் இளைஞர்கள் சவாரி செய்து கொண்டிருக்கையில் ஐயப்பன் ஆர்வமுடன் எழுந்து குளிப்பதற்க்காக கடலில் குதித்துள்ளார்.
அமாவாசை, பெளர்ணமி காலங்களில் கடலில் நீரோட்டம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடலில் குதித்த ஐயப்பன் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதனையறிந்த சக நண்பர்கள் கயிற்றைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்து தேடியுள்ளனர்.
ஆனால் கடலில் குதித்த ஐயப்பனை கடலில் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய இளைஞர்கள் உறவினர்கள் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் இன்று கடலோரக் காவல் படை மற்றும் மீனவர்கள் ஆகியோர் 8 படகுகளில் தேடிச் சென்றபோது ஐயப்பன் மூழ்கிய அதே பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடலை மீட்ட கடலோரக் காவல்படையினர், உடல் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நண்பர்களுடன் படகு சவாரி சென்று இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.