புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,804 பேருக்கு ரூ.117.83 கோடி நகைக் கடன் தள்ளுபடி
அரசு மகளிருக்காக செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களையும் குடும்பத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,804 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.117.83 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் சுனையக்காடு, மறமடக்கி மற்றும் திருநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் , நகைக் கடன் தள்ளுபடிக்கான ஆணை மற்றும் நகைகளை பயனாளிகளிடம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் முதல்முறையாக வேளாண் துறையில் ரூ.36,000 கோடி மதிப்பிலான தனி நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விவசாயிகளால் பெற்ற ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தார்.அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், 5 பவுன் நகை ஈட்டின் பேரில் வழங்கப்பட்ட பொது நகைக் கடன்கள் தள்ளுபடியை அறிவித்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,804 பயனாளிகளுக்கு ரூ.117.83 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணைகளும் மற்றும் நகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, ரூ.2,700 கோடி மதிப்பிலான மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன் தள்ளுபடி, கல்லூரி படிக்கச் செல்லும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் ஆலங்குடி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் புதிதாக அறிவியல் கலைக் கல்லூரி தொடங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகம் கல்வியில் சிறந்த சமுதாயமாக மாறி வருகிறது. அரசு மகளிர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களையும், தங்களது குடும்பத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.