அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்
அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் வளர் பரஸ்பர அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.;
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது. இதனால் வேலையின்றி மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவிடும் வகையில் வளர் பரஸ்பர உதவி அறக்கட்டளை சார்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதுமுள்ள வளர்பரஸ்பர அறக்கட்டளையின் 10 கிளைகளில் இதுவரை 20 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆவுடையார்கோவில் கிளையில் ஆயிரத்து ஐம்பது நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிறுவனர் செபஸ்தியான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவக்குமார் கலந்து கொண்டு கொரொனா நிவாரண பொருட்களை வழங்கினார்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியோடு பொருட்களைப் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் ஜபருல்லா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.