மீனவர்கள் உடல்களை ஒப்படைக்க கோரி சாலை மறியல்

Update: 2021-01-21 06:30 GMT

இலங்கை ரோந்து படகு மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் இறந்தவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக்கோரி கோட்டைப்பட்டினம் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து திங்கள்கிழமை காலை 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மெசியா (30) உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ்,செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.கோட்டைபட்டினத்திலிருந்து 214 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் 213 விசைப்படகுகள் கரை திரும்பினர். ஆனால் ஆரோக்கியசேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்று நான்கு பேரும் கரை திரும்பவில்லை.

இது குறித்து சக மீனவர்கள் விசாரித்த போது ஆரோக்கியசேசுவின் விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு கடலுக்குள் மூழ்கி 4 பேரும் இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதனிடையே இலங்கை ரோந்து படகு மோதி பலியான நான்கு மீனவர்களில் மெசியா, செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன . உயிரிழந்த அனைத்து மீனவர்களின் உடல்களையும் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஆயிரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News