37 ஆண்டுகளாக பனைமரங்களை பாதுகாத்து வளர்த்து வரும் கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் 37 ஆண்டுகளாக பனைமரங்களை பாதுகாத்து வளர்த்து வரும் கிராம மக்கள்;

Update: 2021-09-09 10:58 GMT

புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே பாண்டிகுடி கிராமத்தில் 37 வருடமாக பாதுகாப்பாக வழங்கப்பட்டு வரும் பனை மரங்கள்

ஆனால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி 37 ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை ஒரு கிராமத்தைச் சேர்ந்த கடந்த தலைமுறை இளைஞர்கள் நடவு செய்ததன் விளைவு, தற்போது அந்த விதைகள் விருட்சமாகி பனைமரக்காடாக பரந்து விரிந்து பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அங்கு கம்பீரமாக காட்சியளிக்கும் பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள். இதுவரை வெளிச்சத்திற்கு வராத பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் சூழ்ந்த பனைமரக்காடு குறித்தும் அதனை உருவாக்க ஒரு கிராமத்து இளைஞர்கள் எவ்வாறெல்லாம் பாடுபட்டார்கள் என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ளது பாண்டிக்குடி கிராமம். இந்த கிராமத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலான பாண்டிக்குளம். குளத்திற்கான எந்த சாயலும் இல்லாமல் அழகிய ஏரி போல் காட்சியளித்தாலும் அதனை குளமென்றே அக்கிராமத்து மக்கள் கூறிவருகின்றனர். அந்தக் குளத்தை சுற்றித்தான் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் தற்போது பரந்து விரிந்து அழகிய பசுமை போர்த்திய பனைமரக் காடாக காட்சியளிக்கிறது.

ஒரே இடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பனை மரங்களுக்கு வயது தற்போது 37 ஆகிவிட்டது. இந்த பனை மரங்களில் காய்க்கும் நூங்குகளை உண்பதற்காக சுற்று பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் இருந்தும் இளைஞர்கள் படையெடுத்து அங்கு வருவதாக கூறுகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.  அதுமட்டுமின்றி பனை மட்டைகளுக்காகவும், பனை விறகுகளுக்காகவும், பல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்து பயன்பெறுவதாக கூறுகின்றனர் பாண்டிக்குடி மக்கள்.

பல கிராம மக்களுக்கும் பலனைக் கொடுக்கும் இந்த பல்லாயிரக்கணக்கான பனைமரங்களை வளர்த்து இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற விவசாயி. 1984 ஆம் ஆண்டு திருப்பதிக்கு 26 வயதாக இருக்கும்போது மகாகவி பாரதியாரால் ஈர்க்கப்பட்டு தங்கள் கிராமத்தில் பாரதியார் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் அப்போது இளைஞர்களை நல்வழிப்படுத்த பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை செய்ததோடு தங்கள் கிராமத்தை பசுமையாகவும் மர கன்றுகளை நட முடிவெடுத்தார் திருப்பதி.

அப்போதுதான் அவருக்கு பனை விதைகளை நடவு செய்யலாமே என்று யோசனை தோன்றியது. எளிய முறையில் வளரும் என்பதாலும், தமிழர்களின் பாரம்பரிய மரம் என்பதாலும் இதனைத் தேர்ந்தெடுத்து தனது ஒத்த வயதுடைய இளைஞர்களை ஒன்றிணைத்து பாண்டிக்குளத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை நடவு செய்து முடித்துள்ளனர் திருப்பதியில் அவரது நண்பர்களும். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்,எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு தங்கள் கிராமத்தில் உள்ள பொது இடத்தில் முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விதைத்த பனை விதைதான் இன்று விருட்சமாக உருவெடுத்து பலரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது இன்று.

அந்த விதைகள் மெல்ல மெல்ல வளர்ந்து மரமாக உருவெடுத்து, இன்று அந்த கிராமத்துக்கு மட்டுமின்றி அதனை சுற்றிய பல கிராமங்களுக்கு வரமாக அமைந்துள்ளது அந்தப் பனை மரக்காடுகள். தங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களின் கூட்டு முயற்சியால் இந்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பசுமை போர்த்திய பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் அடங்கிய காடுகளை ஒப்படைத்து விட்டதாகவும் இந்த தலைமுறை இளைஞர்கள் இதனை மேலும் விரிவுபடுத்தி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இன்னும் கூடுதலான பனை மரங்களையும் அதன் பலன்களையும் கொடுத்து விட்டு போக வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திருப்பதி.

அத்தோடு நின்று விடாமல் இந்தத் தலைமுறை இளைஞர்களை ஒன்றிணைத்து அதே பகுதியில் மீண்டும் பனை விதை நடவு செய்யும் முயற்சியிலும் திருப்பதி ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

Similar News