பெரியார் புத்தகத்தை இலவசமாக வழங்கிய தேநீர் கடைக்காரர்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் எழுதிய புத்தகத்தை இலவசமாக வழங்கிய தேநீர் கடைக்காரர்.
புதுக்கோட்டை அருகே வம்பன் பகுதியில் தேனீர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார். இவர் அப்பகுதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் போது அதிக அளவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த பொதுமக்களின் நிலைமையை அறிந்து தன்னுடைய தேநீர் கடையில் தேநீர் அருந்த வரும் அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக தேனீரை வழங்கினார்.
அதேபோல் குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்த காலத்தில் தன்னுடைய தேனீர் கடையில் மொய் விருந்து வைத்து அதில் வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இதுபோன்று பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் சிவகுமார் இன்று பெரியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சமூக நீதி நாள் என அறிவித்தது.
இதனை வரவேற்கும் விதத்தில் புதுக்கோட்டை வம்பன் பகுதிகளில் இன்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை தேனீர் கடை நடத்திவரும் சிவகுமார் அவருடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பெண்கள் கல்லூரி மாணவிகள் என அனைவருக்கும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் இது போன்ற புத்தகங்கள் படிப்பது அரிது. எனவே பெரியாரை பற்றி கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் கல்லூரி மாணவிகள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அவருடைய புத்தகத்தை இன்று கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறேன் என்றும் கூறினார்.