பெற்றோருக்கு தடுப்பூசி விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர்

இந்த நிகழ்வில் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-01-03 07:52 GMT

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் நடைபெர்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

பெற்றோர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் ஏற்படுத்த வேண்டும்  என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். .அதன் தொடர்ச்சியாக,  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி, கோட்டாட்சியர் அபிநயா, சுகாதார துணை இயக்குனர் அர்ஜுன் குமார், தலைமை ஆசிரியர் கௌசல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் அமைச்சர் மெய்யநாதன்  பேசியதாவது: அப்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என தமிழகம் முழுவதும் அதிக அளவில் பரவி வந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்று பாதிப்பைக் குறைத்து மிக சிறப்பாக பணியாற்றினார் நம் முதல்வர்.  தற்போது மூன்றாம் அலை உருமாறிய வைரஸ் தொற்றாக மாறி வரும் சூழ்நிலையில், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் . முகக் கவசம் தனிமனித இடைவெளியை பின்பற்றி, தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும். மாணவ மாணவிகள் பெற்றோர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் தான் ஒரு தந்தையாக இருப்பேன் என பேசி உள்ளார். நாட்டிலேயே ஒரு முதல்வர் இவ்வாறு பேசியது நம்முடைய முதல்-அமைச்சர் மட்டும்தான். எனவே மாணவிகள் தைரியத்துடன் இருக்க வேண்டும். எதனையும் சாதிக்கும் துணிச்சல் உங்களுக்கு வர வேண்டும் எனவே அனைவரும் கவனமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன். 

Tags:    

Similar News