திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் உரியவரிடம் ஒப்படைப்பு
தமிழகம் முழுவதும் ஆடு திருடும் கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடு திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியையும் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முழு ஊரடங்கு பிறப்பித்தது.இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்த ஒருசிலர் பல்வேறு நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் ஈடுபட தொடங்கினர்.அதில் அதிக அளவில் பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் சுலபமான வழியாக திருடர்கள் கையாண்டது ஆடு திருடுவதைதான்.
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை காணவில்லை என பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஆடு திருடர்களை பிடிக்க சென்ற பொழுது புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் ஆடு திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஆடு திருடும் கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ,கறம்பக்குடி, ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருடும் தொழிலில் ஈடுபட்ட திருடர்களை மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்து இன்று வடகாடு காவல் நிலையத்தில் ஆடு திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகளை உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்த ஆடுகளை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆடு திருடர்களால் காவலர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஆடு திருடர்களை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபடும் காவல்துறையின் செயல் ஒரு பக்கம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் ஒரு காவலரை ஆடு திருடர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னரே காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி ஆடு திருடர்களை பிடித்து வருவது வேதனைக்குரிய விஷயம் என பொதுமக்கள் பேசிக்கொண்டே சென்றது குறிப்பிடத்தக்கது.