ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை தோட்டங்கள் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வீசிய சூறைக்காற்றில் விழுந்து சேதமடைந்த வாழைமரங்களை தோட்டத்திற்கே சென்று அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த காற்றுடனான கனமழை பெய்தது. இதேபோல் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வடகாடு, கீழாத்தூர்,மேலாத்தூர், கருக்க்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சேதம் அடைந்தது.இதனால் வேதனைக்கு உள்ளான விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வடகாடு கிராமத்தில் சேதமடைந்த வாழை தோட்டங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் காற்றால் சேதமடைந்த வாழை தோட்டங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கவும் அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.