புதுக்கோட்டை அருகே மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம கும்பல்

புதுக்கோட்டை அருகே தனியாக இருந்த மூதாட்டியை, மர்ம கும்பல் கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-06-15 13:36 GMT

புதுக்கோட்டை மூதாட்டி கொலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி பஞ்சாயத்து, இன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள் (70). இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பக்கத்தில் ஊரில் வசித்து வருகின்றனர். வீரம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (15ம் தேதி) காலை 9 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீரம்மாள் வீட்டு வழியே சென்றபோது, வீரம்மாள் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகை திருடு போயிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புதுக்கோட்டை, கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கணேஷ் நகர் காவல் துறையினர், தடயவியல் துறையினர், மோப்பநாய் பிரிவினர் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி ராதிகா சம்பவ இடம் வந்து ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

70 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News