புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் : பிஆர் பாண்டியன்
புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.;
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காக்குறிச்சி வடதெரு கிராமத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மீண்டும் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி சர்வதேச ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த டெல்டா விவசாயி களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் இன்று அந்த எரிவாயு குழாய் அமைந்துள்ள பகுதியில் அப்போது விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கருக்காக்குறிச்சி வடதெரு கிராமத்தில் அமைந்துள்ள ஆள்துளை எண்ணெய்க் கிணற்றை பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் அப்பகுதி விவசாயிகளோடு கலந்த ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது
தமிழகத்தை சீர்குலைக்க மத்திய அரசு சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுடன் விவசாயிகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது, டெல்டா மாவட்டங்களில் இதுபோன்ற எரிவாயு எடுக்கும் ஒப்பந்தங்களை தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அறிவித்து வருகிறது, இது கண்டனத்துக்குரியது,
வருகின்ற 17ஆம் தேதி பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவிப்பதோடு இனிமேல் இதுபோன்ற ஒப்பந்தங்களை மத்திய அரசு அறிவிக்க கூடாது என வலியுறுத்த வேண்டும்,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இது போன்று எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த சட்டரீதியில் மத்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை,
தமிழக அரசு மீதும் தமிழக முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, விரைவில் தமிழக முதலமைச்சர் அமைச்சரவையை கூட்டி மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன்கூறினார்.