பேருந்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் புகார்:உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு;

Update: 2021-11-19 09:06 GMT

திருவரங்குளம் ஒன்றியம் சேந்தாங்குடியில் மழையால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாயிகள் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதையும் அதேபோல் தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல் இன்று மறமடக்கி , திருவரங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது குளவாய்பட்டி அருகே அரசு பேருந்துகள் நின்று செல்லவில்லை என அமைச்சரிடம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அந்த இடத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக நாளை முதல் பேருந்து இந்த இடத்தில் நின்று செல்ல வேண்டும் இல்லை என்றால், நான்  காத்திருந்து  பேருந்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

பொதுமக்கள் கூறிய கோரிக்கையை அடுத்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவை பிறப்பித்த அமைச்சரின் செயலுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News