டெல்லி கொரோனா நோயாளிகளுக்காக மொய் விருந்து நடத்திய டீ கடை அதிபர்
டெல்லி கொரோனா நோயாளிகளுக்கு உதவ, டீக்கடை அதிபர் மொய் விருந்து நடத்தி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தார்.;
புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில் கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற பெயரில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், கஜா புயல் பாதித்த போது அப்பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர் டீ கடையில் வைத்த வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார்,
மேலும் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பகுதி வறட்சியான சூழ்நிலையை உணர்ந்து செம்மரம், சந்தன மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய சிவகுமார் கடந்த கொரோனா முதல் அலையில் இருந்து தற்போது வரை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பொது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வரக்கூடிய இந்தசூழ்நிலையில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உயிருக்குப் போராடி வரும் பொது மக்களை காக்க அவரது டீக்கடையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து என்ற பெயரில் நிவாரணம் வசூல் செய்யப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கை அடித்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
இதனையடுத்து இன்று அவர் கடையில் தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனாவால் உயிருக்குப் போராடி வரும் பொது மக்களை காக்க அவர்களால் இயன்ற நிவாரண தொகை வழங்கி டீக்கடை உரிமையாளர் சிவகுமாரை பாராட்டி சென்றனர்.