சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
ஆலங்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது கருக்காக்குறிச்சி தெற்குத்தெரு கிராமத்திலுள்ள ஒரு புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் 2600 லிட்டர் சாராய ஊரல்கள் சட்டவிரோதமாக பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணனுக்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்த எஸ்பி பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய ஊரல்களை தரையில் ஊற்றி அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அக்கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசிய எஸ்பி பாலாஜி சரவணன் இனிமேல் இதுபோன்ற சட்ட விரோத சம்பவங்களில் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஈடுபடக்கூடாது என்றும் இதுபோல் சாராயம் காட்சி நபர்கள் மீது போலீசார் இடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கிய அவர் இதனையும் மீறி மீண்டும் சாராயம் காய்ச்சும் செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட பகுதியை கண்டறிந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2600 லிட்டர் சாராய பேரல்களை கண்டறிந்த ஆலங்குடி மதுவிலக்கு ஆய்வாளர் குணமதி உள்ளிட்ட 11 போலீசாருக்கு வெகுமதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார்.