புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் : மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-06-13 08:04 GMT

ஹைட்ரோகார்பன்  திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி வடதெரு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக அந்த பகுதியில் பிளான்ட் அமைக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.


அப்போது பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை தடுத்து விட்டதால் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் பிளான்ட் தற்போது துருப்பிடித்து  இருந்து வருகிறது.  இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சி செய்த மத்திய அரசை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்ட்டது. 

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி வட தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் பிளான்டில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கருக்காகுறிச்சி வட தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் பிளாண்டின் மீது ஏறி விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

Similar News