வல்லத்திராக்கோட்டையில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்
அதிகாரிகளை கண்டித்து, வல்லத்திராக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கட்டி, ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.;
புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கன்சல் பேகம் தலைவராக இருந்து வருகிறார். வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளுக்காக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றுவது கிடையாது. மற்ற ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள் வல்லத்திராக்கோட்டை ஊராட்சியை புறக்கணித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல ஊராட்சி மன்ற தலைவரை அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் அழைப்பதில்லை வல்லத்திராக்கோட்டை ஊராட்சியை அரசு அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால்பொதுமக்கள் கூறும் எந்த பணிகளையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்று, ஊராட்சி தலைவரும், உறுப்பினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன், அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்து, இன்று வல்லத்திராக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கன்சல் பேகம், துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக, வல்லத்திராக்கோட்டை ஊராட்சி விஷயத்தில், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி, வளர்ச்சிப்பணிகள், மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, ஊராட்சி சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.