மின்சாரம் வரவில்லை... ஊராட்சித் தலைவரின் மண்டையை உடைத்த இளைஞர்
போராடிய மக்களிடம் மின் விநியோகம் சிறிது நேரத்தில் வந்து விடும் என்றும் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்;
மின்சாரம் வராததால் ஆத்திரத்தில் ஊராட்சித் தலைவரின் மண்டையை உடைத்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி ஊராட்சியில் நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த ஊராட்சியின் தலைவர் செல்வராஜ் சோழன் என்பவர், மின் துறை பணியாளர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களோடு இணைந்து மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வந்து மின் விநியோகம் சிறிது நேரத்தில் வந்து விடும் அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா என்ற இளைஞர் ஊராட்சித்தலைவரை தாக்கியதில், அவரது மண்டை உடைந்து ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக ஊராட்சி தலைவர் செல்வராஜ்சோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.