கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்தவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசளிப்பு
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது
கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்து வளர்த்த கால்நடை வளர்ப்போருக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசு வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெண்ணாவால்குடியில் இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.மேலும் வெண்ணாவால் குடி கிராமத்தில் கால்நடைகளை சிறப்பாக பராமரித்து வளர்த்த கால்நடை வளர்ப்போருக்கு அண்டா குண்டா குடம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி கால்நடை வளர்ப்போர்களை பாராட்டினார்.மேலும் கால்நடை வளர்ப்போருக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் வான்கோழி மற்றும் கருப்பு கோழி உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக மழைக்காலங்களில் கால்நடைகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதி மழைக்காலங்களில் கால்நடைகளின் பாதிப்பை குறைக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணாவால்குடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் பங்கு பெற்று தங்கள் கால்நடைக்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பெற்று செல்ல வேண்டும் என்றார் அமைச்ச சிவ.வீ. மெய்யநாதன். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.