குருங்காடுகள் அமைக்கும் பணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்கள்- ஏரிகளில் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்;

Update: 2021-12-08 07:37 GMT

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி முதல் கும்மங்குலம் வரை தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் நிகழ்வினை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குருங்காடுகள் அமைக்கும் பணியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் வெளிநாட்டு மரங்கள் இருக்கக் கூடாது. தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து இடங்களிலும் நாட்டு மரங்கள் தான் வளர்க்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்,  நாட்டு மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும், மரக்கன்றுகள் நடுவதையும் மரக்கன்றுகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்தி வருகிறார். அதேபோல்,  தமிழகம் முழுவதும் அதிக அளவில் குருங்காடுகளை அமைத்து அதிக அளவில் தமிழ்நாட்டில் நாட்டு மரங்கள் வளர்க்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் ஏரிகளில் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக,  இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி முதல் கும்மங்குலம் வரை தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் நிகழ்வினை தொடக்கி வைத்தார் . இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை தொடர்ந்து நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம் , ஒன்றியக்குழு உறுப்பினர் சகுந்தலா தேவி, ராஜேந்திரன், உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News