இடிதாக்கி ஏற்பட்ட மின் கசிவினால் நார் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
இடிதாக்கியதில் ஏற்பட்ட மின் கசிவினால் நார் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இரண்டு இடங்களில் கயிறு தயாரிக்கப் பயன்படுத்தும் தென்னை நார் உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து ஆலங்குடி பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது முத்துராஜிற்கு சொந்தமான ஆலங்குடி நகர் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி தென்னை நார் ஆலையில் உள்ள மின்கம்பத்தில் இடி தாக்கியது.
இதனால் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தென்னை நார் ஆலையில் கயிறு தயாரிக்க அனுப்ப தயார் நிலையில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான தென்னை நார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட ஆலையில் பணிபுரிபவர்கள் உடனடியாக ஆலங்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் அருகாமையில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் முத்துராஜிற்கு சொந்தமான மற்றொரு தென்னை நார் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் இடி தாக்கி ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.