ஆலங்குடி அருகே குடிநீர் கிடைக்காமல் உப்பு நீரை குடிப்பதால் பலருக்கு கிட்னி பாதிப்பு
காலி குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மற்றும் வேப்பங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட தேத்தாம்பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் அருகே உள்ள கிராமத்தில் இருந்து போர் தண்ணீர பயன்படுத்தி குடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த உப்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பற்களில் கறை மற்றும் கிட்னி பாதிக்கப்பட்டு வருவதாக கிராம பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இந்த குடிநீர் பற்றாக்குறையால் குடிப்பதற்கு குடிநீர காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையால் வீட்டுக்கு வரும் உறவினர்கள் கூட வீட்டிற்கு வருவதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தேத்தாம்பட்டி கிராமத்தில் குடிநீர் மற்றும் ஆழ்துளை போர் வசதிகளை ஏற்படுத்தி வழங்கிட வேண்டுமென பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் ஆலங்குடி தாசில்தார் பொன்மலர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு முறையாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்ததை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.