ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அரசு பள்ளி மாணவர்கள்
தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பள்ளி மாணவ மாணவிகள் மனு அளிக்க வந்தனர்
அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட மழையூர் அரசு மேல்நிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வணிகவியல் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்கள் பாடங்கள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த மாத இறுதியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், தொடர்ந்து இப்பள்ளிகள் வணிகவியல் துறைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அங்கே முறையான பதில் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது , மாணவர்களிடம் உடனடியாக ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உறுதி அளித்தார். மேலும் இன்னும் தேர்வுகளுக்கு 25 நாட்களே இருக்கும் நிலையில் தற்பொழுது ஆசிரியர் நியமித்தாலும் தாங்கள் பாடம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.