ஆலங்குடி தொகுதியில் நிலத்தடி நீரை உறியும் தைல மரங்களை அகற்றுவேன் : திமுக வேட்பாளர்
ஆலங்குடி தொகுதியில் நிலத்தடி நீரை உறியும் தைல மரங்களை அகற்றுவதாக தி.மு.க வேட்பாளர் உறுதி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ மெய்யநாதன் மீண்டும் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ மெய்யநாதன் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
' 5 ஆண்டுகாலம் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தும் தொகுதி மேம்பாட்டிற்கு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். ஆலங்குடி தொகுதியில் மின் கோட்ட பொறியாளர் அலுவலகம் , வம்பனில் வேளாண் பட்டயப் படிப்பு கல்லூரி, ஆலங்குடியில் உரிமையியல் நீதிமன்றம் , துணை மின் நிலையங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள் என பொதுமக்கள் பயன்பெறும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொகுதியின் அனேக இடங்களில் நிலவிவந்த 70% குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தபட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் காவிரி குண்டாறு உபரி நீரை இப்பகுதியிலுள்ள அம்புலிஆறு, வில்லாறு, போன்றவற்றில் இணைத்து இப்பகுதியில் விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சனையை தீர்த்துவைக்கும் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவேன்.
முக்கியமாக இப்பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் வகையில் சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தைல மரங்களை அகற்றி இப்பகுதியில் மழை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாட்டின் முதுகெலும்பான இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 டிஎம்சி தண்ணீர் தேங்கும் அளவிற்கு அணைக்கட்டு கட்டப்படும் .இதுபோல் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சியடைய உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார்.