நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
நேற்று இரவு நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மது குடித்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.
ஆலங்குடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நேற்று இரவு நம்ம கோட்டை சேர்ந்த துப்பாக்கி முருகன் என்பவரது மகன் செல்வ கணபதி என்ற விஜய்( 23 ) இவர் ஆலங்குடியில் உள்ள பாரில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மது குடித்து கொண்டிருக்கும்போது, நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இரவு கலிபுல்லா நகர், பிள்ளையார் கோவில் அருகில் செல்வ கணபதி என்ற விஜய் தனியாக வரும் போது, மறைந்திருந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியும் விடாது துரத்தி சென்று வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து ஆலங்குடி பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஆலங்குடியில் கொலைக் குற்றங்கள் திருட்டு போன்ற குற்றங்களுக்கு துணை நிற்பது, ஆலங்குடி காவல்துறையினர் தான் காவல்துறையிடம் ஒரு சில இடங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக பலமுறை தகவல் தெரிவித்தும், காவல்துறை கண்டுகொள்ளாததால் நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அதிக அளவில் காவலரை நியமித்து இரவு நேரங்களில் கண்காணிக்க வேண்டும். மேலும், ஆலங்குடியில் பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட கேமரா இருந்தும் அது செயல்படாமல் உள்ளது. கேமரா செயல்பட்டால், இது போன்ற சம்பவங்களில் ஈடுப்படும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் காவல்துறையினர் அலட்சியத்தால், பொருத்தப்பட்ட செயல்படாமல் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கேமரா சரி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.