ஆத்தா கொளுத்த சொன்னதால் கொளுத்தினேன்: வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
மகளிர் சுய உதவி குழுவினரால் நடத்தப்பட்டு வரும் தொழில் நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த நபர் கடையை உடைத்து தீ வைத்து கொளுத்தில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பூவரசகுடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தக் குழுவிற்கு இந்திரா தலைவியாக உள்ளார். இந்த நிறுவனத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முன்னிட்டு தேசிய கொடிகள் மற்றும் ரெடிமேடு துணி வகைகள், வாழை நார் கூடைகள், முகக் கவசங்கள், நைட்டிகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் சந்தனத்தைப் பூசிக் கொண்டு கையில் அருவாள் மற்றும் கடப்பாறையோடு வந்து மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவனைப் பிடிப்பதற்காக முயன்ற போது பழனிச்சாமி அவர்களை கையில் அருவாள் வைத்துக் கொண்டு மிரட்டியதோடு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இதையடுத்த அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் இந்திரா இது குறித்து வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் மறைந்திருந்த பழனிச்சாமியை கைது செய்தனர்.
மேலும் பழனிச்சாமியின் உடலிலும் தீ காயங்கள் இருந்ததால் உடனடியாக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று இரவு ஆத்தா தன் கனவில் வந்து அந்த நிறுவனத்தை தீயிட்டு கொளுத்துமாறு கூறியதால் நான் அந்த நிறுவனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதேப்போல் கடந்த ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளன்று இதேபோன்று உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் சந்தனம் பூசிக்கொண்டு அரிவாளோடு ஊருக்குள் பழனிச்சாமி உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.