6 அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் பறக்கும் படை சோதனை

Update: 2021-04-03 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வீடு உள்ளிட்ட 6 அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தர்ம தங்கவேலு என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட அரையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மலர்விழி மற்றும் அந்த ஊராட்சியின் அதிமுக கிளை செயலாளராக இருக்கும் அவரது கணவர் துரை என்பவரது வீட்டில் இன்று காலை முதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருவாய்துறையினர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் அரையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துரைக்கண்ணு, அறிவழகன், சின்னகண்ணு, ராமலிங்கம் ஆகிய அதிமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் அவர்களின் வீடுகளிலிருந்து எந்தவிதமான பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News