கோவில் இடம் ஆக்கிரமிப்பு : பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்
ஆலங்குடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் இடத்தை பார்வையிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவிலுக்குச் சொந்தமான சுமார் 67 செண்ட் பரப்பளவில் குளம் உள்ளது. இதனை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனைத்தொர்ந்து, மாவட்ட கலெக்டர், ஆலங்குடி தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பா.ஜ.க., மாவட்ட தலைவர் ராம. சேதுபதி, மாநில மகளிரணி செயலாளர் கவிதா ஆகியோர் தலைமையில், மாவட்ட பொது செயலாளர்கள் ரெங்கசாமி, பாலு, மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, ஒன்றிய தலைவர்கள் ராம்குமார், பாஸ்கர், அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவிலுக்குச் சொந்தமான இடத்தை பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க., மாவட்ட தலைவர் ராம. சேதுபதி கூறுகையில் ... தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமாக 5.75 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது 3.25 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.