ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை மாற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் என்பவரை நேற்று அதிமுக தலைமை அறிவித்தது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தர்ம தங்கவேலு கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். இதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததும் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காலம் காலமாக அதிமுகவில் தொண்டனாக இருந்து வரும் பலர் இருக்கும் போது இத்தனை ஆண்டு காலமாக அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தர்ம தங்கவேலு என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எனவே அவரை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். பேரணி கடைவீதி, வடகாடு முக்கம், அரசமரம் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. பேரணியின் போது தொண்டர் ஒருவர் திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். வேட்பாளரை மாற்றும் வரை தினமும் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.