கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் வருகின்ற 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அந்தப் பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணி இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இன்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் முன் பதிவு செய்யும் பணி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான காளை வளர்ப்பவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களது காளைகளை முன்பதிவு செய்து டோக்கன்களை பெற்றுச் சென்றனர்.மேலும் நான்கு வயதுக்கு மேற்பட்ட காளைகள் மட்டுமே பதிவு செய்ததாலும் போட்டியில் 500 முதல் 600 காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று கூறியதாலும் ஏராளமானோர் தங்களது காளைகளை முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வரும் 17 ம்தேதி விராலிமலையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.