எலச்சிபாளையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்ட எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராஜவேலு முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், மாற்றுத்திறன் பற்றியும், மருத்துவ முகாமில் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் பற்றியும் பேசினார்.
மருத்துவ முகாமில், எலச்சிபாளையம் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். மருத்துவ முகாமில் கண் மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், எலும்பியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை, அடையாள அட்டை, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை, உதவி உபகரணங்களுக்கு பரிந்துரை ஆகியன வழங்கினார்கள்.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 102 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றனர். முகாமில் 13 மாணவர்களுக்கு புதியதாக அடையாள அட்டை, 9 மாணவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல், 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை, 8 மாணவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட பதிவும் செய்யப்பட்டது. மாணிக்கம்பாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்தனர். மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடுகளை சிறப்பு பயிற்றுநர்கள் பெரியசாமி , கமலா, இயன்முறை மருத்துவர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுதா , செந்தமிழ் ஆகியோர் செய்திருந்தனர்.