முன்னாள் டாஸ்மாக் பணியாளர் கொலை: கரும்பாலை உரிமையாளர் கைது
முன்விரோதம் காரணமாக முன்னாள் டாஸ்மாக் பணியாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த கரும்பு ஆலை உரிமையாளர் கைது.;
சேந்தமங்கலம் அருகே துத்திக்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48) கரும்பு ஆலை உரிமையாளர். இவர் லாரித் தொழிலிலும் நடத்தி வருகிறார். இதற்காக சேந்தமங்கலம் அருகே மலைவேப்பன்குட்டையைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இத்தொகையை சிவக்குமார் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு சேந்தமங்கலம் அருகே காளப்பநாய்க்கன்பட்டி - கொல்லிமலை செல்லும் ரோட்டில் சிவக்குமார் மற்றும் அவரது நண்பரான முருகேசன் (43), என்ற முன்னாள் டாஸ்மாக் பணியாளரும் வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த செந்தில்குமாரிடம் இருவரும் கடன் தொகையை திரும்பக் கேட்டுள்ளனர்.
இதனால் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகேசன் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.