மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது

ராசிபுரம், அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-11 02:45 GMT

கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள, மற்றும் கதிரேசன் மற்றும் கீர்த்தனா.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (33), தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30), இவர்களுக்கு ஜன ஸ்ரீ (13) கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் மோகன்ராஜ் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற ஆயில்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன்ராஜின் மனைவி கீர்த்தனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார். இந்த நிலையில் கீர்த்தனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையொட்டி, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் போலீசார் கீர்த்தனாவிடம் துருவித்திருவி விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனில் பேசிய பேச்சுக்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது வரகூர் கோம்பையைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும், கீர்த்தனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையொட்டி கதிரேசன் மற்றும் கீர்த்தனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்: வரகூர் கோம்பையைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் கதிரேசனுக்கும், கீர்த்தனாவுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த மோகன்ராஜ் மனைவி கீர்த்தனாவை கண்டித்துள்ளார்.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்துவிட்டு இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் மோகன்ராஜ் சாப்பிட்டபோது, கீர்த்தனா குழம்பில் தூக்க மாத்திரைகளை போட்டு உள்ளார். மோகன்ராஜ் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள மின் இணைப்பில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தனர்.

இதையடுத்து தனது கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாதது போல் கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து ஆயில்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கீர்த்தனா மற்றும் கதிரேசனை கைது செய்தனர். சேந்தமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News