நாமக்கல் மாவட்டத்தில் 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: அமைச்சர் கீதா ஜீவன்
நாமக்கல் மாவட்டத்தில் 165 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.;
நாமக்கல் கோட்டை நகராட்சிப் பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தை, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நகராட்சித் தலைவர் கலாநிதி ஆகியோர்.
நாமக்கல் மாவட்டத்தில் 165 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சமுக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையம், சத்துணவு மையம், சகி - ஒருங்கிணைந்த சேவை மையம், அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் படி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சிறப்பான அடிப்படை கல்வியும், சுகாதாரமான முறையில் ருசியான சத்துணவு மற்றும் இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த–சகி சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை இம்மையத்தின் மூலம் 574 வழக்குகள் பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் முன்னெடுப்பில் போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக 165க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார்.
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையம், சத்துணவு மையம், சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.