ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
நாமக்கல், மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து, பாசனத்திற்காக ராஜாவாய்க்காலில் தண்ணீரை, கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்தார்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே படுகை அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து, பாசனத்திற்காக ராஜாவாய்க்காலில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ராஜாவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்துப் பேசியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து 51 வது மைலில் அமைந்துள்ள, நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையின் இடது புறத்தில் இருந்து துவங்கும் ராஜா, பொய்யேரி, குமாரபாளையம், மோகனூர் ஆகிய பாசன வாய்க்கால்களில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று மீண்டும் பாசனத்திற்காக 150 கன அடி தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் ராஜா வாய்க்கால் அமைப்பில் சுமார் 16,150 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிகம் மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
முன்னதாக, ராஜா வாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயக்கர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ப.வேலூர் எம்எல்ஏ சேகர், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மற்றம் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, சேலம் சரபங்க வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் பாசனப்பிரிவு உதவி பொறியாளர் சுரேகா, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், ராஜா, பொய்யேரி, குமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.