நாகை அருகே வீடு புகுந்து திருடிய திருடனுக்கு கிராம மக்கள் தர்ம அடி

நாகைஅருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய நபரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2021-09-26 13:02 GMT

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கீழகாவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி.இவர் தனது விவசாய பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் நேற்றிரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் படுத்து உறங்கினார்.

நள்ளிரவு இவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் 3 பேர் வீட்டின் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை அங்கிருந்து திருடியுள்ளனர். மேலும் உறங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின் மனைவி சாந்தியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர்

அப்போது சுதாரித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து திருடர்கள் சாந்தியின் வாயை துணியால் பொத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தியின் குழந்தை வீறிட்டு அலறியது. இதையடுத்து வாசலில் படுத்திருந்த செந்தில்குமார் ஓடி வந்து திருடனைப் பிடிக்க முயன்றுள்ளார். அவர்களை தள்ளி விட்டு மூன்று திருடர்களும் வயல் வெளியில் தலை தெறிக்க ஓடி தப்பி ஓட முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருடர்களை  விரட்டிச் சென்று தேவூர் அருகே மடக்கினர். இதில் இரு திருடர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒரு திருடன் மட்டுமே கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டதை அடுத்து அவனை அங்கிருந்து அலேக்காக தூக்கி வந்து கிராமமக்கள் கம்பத்தில் கட்டி வைத்தனர். அதனை தொடர்ந்து திருடனுக்கு விடிய, விடிய  தர்ம அடி விழுந்தது.

கிராம மக்கள் பிடித்து கொடுத்த நபரை போலீசார் வேனில் ஏற்றினர்.

இதையடுத்து கீழ்வேளூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடமிருந்து திருடனை மீட்டு, அவன் திருடி வைத்திருந்த தங்க நகைகள், பாத்திரங்களை  கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில் கிராம மக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் கீழ்வேளூர் அருகே உள்ள வடக்காலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது .மேலும் தப்பிச் சென்ற மற்ற இரு திருடர்கள் குறித்தும் போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News