திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை

பயிர் பாதிப்புக்குள்ளான டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

Update: 2021-11-13 01:45 GMT

திருக்குவளையில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த, ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்த மழையின் காரணமாக,  டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை வெள்ள நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய,  ஐ பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள்  குழுவை அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,  திருவாரூரில் அமைச்சர்கள் குழு  ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள அருந்தவம்புலம் வந்த ஐ பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், பெரியகருப்பன், ரகுபதி சக்ரபாணி ஆகியோர்,  வெள்ள நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டனர்.

அப்போது,  அங்கிருந்த விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்களுக்கு அரசு உதவிட வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதாவது:

விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் வகையில் திறந்து வைக்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் ஆறு குளம் ஏரி தூர்வாரப்படவில்லை. முகத்துவாரம் தூர்வாரப்படாத காரணத்தால், மழை நீரை கடலுக்கும் இழுக்கும் சக்தி இல்லை. 10 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினை இல்லாதவாறு திமுக அரசு புதிதாக திட்டம் தீட்டி அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.  மழை வெள்ளத்தால் பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, நிவாரண தொகை உயர்த்தி வழங்குவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றார்.

Tags:    

Similar News