நாகையில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் மதுபானம் கொள்ளை
நாகையில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் 73 ஆயிரம் மதிபுள்ள மதுபானங்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள காரணத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் பாலக்குறிச்சி பகுதியில் இயங்கிவந்த டாஸ்மாக் கடை கடந்த 9 ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டாஸ்மாக் கடைக்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த கடை காவலாளிகள் அந்தோணிசாமி, மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு தாக்கி 73 ஆயிரத்து 400 ரூபாய் மதுபாட்டில்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
அதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான போலிசார் டாஸ்மாக் கடையில் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மதுபானங்கள் திருட்டு சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.