நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-07-29 08:06 GMT

நாகையில் உள்ள பழமை வாய்ந்த பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பழமை வாய்ந்த பரவை சந்தை உள்ளது. இங்கு நாகை மாவட்டத்தில் விளையக்கூடிய தேங்காய், மாங்காய், கீரை உள்ளிட்ட காய்கறிகள் இங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இங்கு இயங்கி வந்த பரவை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு நிர்ணயித்த ஈசிஆர் சாலையில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வழக்கம்போல் பரவை சந்தையை வர்த்தகர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். இதுநாள் வரை இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்,  இன்று பழமை வாய்ந்த பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வர்த்தகர்களின் கடையடைப்பு போராட்டம் காரணமாக பரவையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பரவை சந்தையில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி வாங்க வந்த சிறு குறு வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திறந்தவெளியில் நடைபெற்று வரும் தற்காலிக சந்தையில் இரவு நேரங்களில் பெண் வியாபாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதால், பரவை சந்தையை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags:    

Similar News