ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ விபத்து
நாகை அக்கரைப்பேட்டை ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகள் எரிந்து சேதமடைந்தன.
நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியரசு மற்றும் ரத்தினவேல். இவர்களுக்கு சொந்தமான பைபர் படகுகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அக்கரைப்பேட்டை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியதையடுத்து அருகில் இருந்த மீனவர்கள் ஆற்றுப் பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது கலியரசு மற்றும் ரத்தினவேலு சொந்தமான படகுக்கு மர்மநபர்கள் யாரோ தீ வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீப்பற்றி எரிவதை கண்ட மீனவர்கள் நீண்ட நேரம் போராடி படகில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீ விபத்தில் கலியரசு படகு மற்றும் இன்ஜின், வலைகள், ஐஸ் பெட்டி முற்றிலும் சேதமடைந்தது. ரத்தினவேலுக்கு சொந்தமான படகு மற்றும் இன்ஜின் சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான படகு மற்றும் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.