கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது
பர்கூர் அருகே, கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி பகுதியில், ரேஷன் பொருட்களை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்தி வருவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ&க்கள் முரளி, சிவசாமி ஆகியோர் கிருஷ்ணகிரி & குப்பம் சாலையில் உள்ள வரட்டன்பபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அவ்வழியே டூவீலரில் இரண்டு மூட்டைகளுடன் சென்றவரை நிறுத்தி, அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை எடுத்து வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மகாராஜகடை அருகில் உள்ள நாரலப்பள்ளி அடுத்த ஆக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரர்(25) என்று தெரிந்தது.
அவர் வரட்டனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாஙகி, கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, நெடுசாலை, குப்பச்சிப்பாறை, சின்னகொத்தூர், சிங்கிரிப்பள்ளி வழியாக கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதிக்கு கடத்தி சென்று விற்று வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ அரிசி மற்றும் டூவீலரையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.