வேப்பனஹள்ளி அருகே ஓட ஓட விவசாயி வெட்டிக்கொலை: மருமகளின் தம்பி கைது
வேப்பனஹள்ளி அருகே ஓட, ஓட விரட்டி விவசாயி வெட்டிக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் அவர் தனது வீட்டில் இருந்து, மாதிநாயனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள தனது தக்காளி தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், வெங்கடப்பனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் வெங்கடப்பனை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது.
இந்நிலையில் வெங்கடப்பன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதியினர், வேப்பனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், வேப்பனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கடப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சொத்து பிரச்சினை காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக கொலையுண்ட வெங்கடப்பனின் இறந்து போன மருமகள் ஜமுனாவின் தம்பி கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தன்ர். அவரிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வேப்பனஹள்ளி அருகே விவசாயியை காரில் வந்த கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.