கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸ் முன்பு கோமாவில் உள்ள மகனுடன் பெண் தர்ணா

கோரிக்கைகளை வலியுறுத்தி, கோமாவில் உள்ள மகனுடன், கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸ் முன், பெண் தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-07-20 11:30 GMT

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி,  கோமாவில் உள்ள மகனுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா(36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் ஹரி(16), ஹரி 2018ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார். வயிற்றில் உள்ள குழாய் மூலம் உணவு செலுத்தப்படுகிறது.

கோமாவில் உள்ள மகனுக்கு பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கோமாவில் உள்ள மகனுடன் மஞ்சுளா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மஞ்சுளாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மஞ்சுளா அங்கிருந்து சென்றார். இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News