கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-30 14:15 GMT
யானை தாக்கி உயிரிழந்த முதியவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே உள்ள நார்பணட்டியை சேர்ந்தவர் பஜ்ஜப்பா (80). கூலித் தொழிலாளி.  இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகில் உள்ள வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலையும் ஆடுகளை மேய்ப்பதற்காக அவர் சென்றுள்ளார். அந்த நேரம் ஒற்றை யானை அங்கு வந்துள்ளது. அதனைப்பார்த்த பஜ்ஜயப்பா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பஜ்ஜியப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை ஆடுகள் வீட்டிற்கு வந்த நிலையில், விவசாயி பஜ்ஜியப்பா வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தனர். அப்போது நார்ப்பணட்டி வனப்பகுதியில் யானை தாக்கிய நிலையில் பஜ்ஜயப்பா பிணமாக கிடந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்கி பலியான பஜ்ஜப்பா குடும்பத்திற்கு முதல் கட்டமாக வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை உதவி வன பாதுகாவலர் கார்த்தியாயினி வழங்கினார்.

Tags:    

Similar News