தளி அருகே ரவுடி கொலை தொடர்பாக 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ரவுடி கொலை தொடர்பாக, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;
கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் கார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கும்ளாபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (29). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.கடந்த 29ம் தேதி இரவு கும்ளாபுரம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
கொலை செய்யப்பட்ட உதயகுமாரும், கும்ளாபுரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரவி என்கிற பகவதா (30), சம்பங்கி (35), வஜ்ரமணி (32) ஆகியோர் நண்பர்கள். 29,ந் தேதி கங்கம்மா கோவில் திருவிழாவிற்காக உதயகுமார் வந்தபோது, அவருக்கும், ரவி, சம்பங்கி, வைரமணி இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர், உதயகுமார் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை ரவி, சம்பங்கி, வைரமணி ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இவ்வழக்கில் 3 பேரையும் தேடி வருகிறார்கள். அவர்களை தேடி கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளார்கள்.