தேன்கனிகோட்டையில் அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானை: வனத்துறையினர் விரட்டியடிப்பு
ஜவளகிரி வனப்பகுதிகளில் அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை நேரலகிரி, சிகரலப்பள்ளி, பச்சப்பனட்டி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து 3 விவசாயிகளை கொன்றுள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் மேலும் பல பேர்களை தாக்கி கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வந்த இந்த ஒற்றை காட்டுயானை தேன்கனிகோட்டை வனப்பகுதிக்குள் முகாமிட்டிருந்தது. தொடர்ந்து காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர் சுற்றுப்புற கிராமங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று இந்த ஒற்றையானையை 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தேன்கனிகோட்டை வனப்பகுதியிலிருந்து ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனையடுத்து இன்று காலை இந்த யானையை அங்கிருந்து கர்நாடகா மாநில வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.