கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 வாகனங்களை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து விசாரணை.;
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 வாகனங்களை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ.க்கள், தென்னரசு, முரளி உள்ளிட்டோர், ஆனேக்கல் & தேன்கனிக்கோட்டை சாலையில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜவளகிரி அருகே சென்ற டாடா ஏஸ் வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
விசாரணையில் ஜவளகிரி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதைடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ராம்நகர் கடுசிவனள்ளி பகுதியை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்து சரக்குவாகனம், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இன்று கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நடத்திய வாகன சோதனையில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்திய ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தண்டேகுப்பத்திலிருந்து கர்நாடகத்திற்கு அரிசி கடத்த முயன்ற கோபி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.