விளை நிலங்களில் இருந்து எரிவாயு குழாய் அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
விளை நிலங்களில் உள்ள எரிவாயு குழாய் அகற்றக்கோரி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கலெக்டரிம் மனு அளிக்கப்பட்டது.;
இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் தலைமையில் விவசாயிகள், கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக, எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் திட்டத்தை அமைக்க முயன்று வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் இடைவெளியில், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிரட்டி, கெயில் நிறுவனம் குழாய்களை அமைக்க தொடங்கியது. இதை அறிந்த 7 மாவட்ட விவசாயிகள் 400க்கும் மேற்பட்டோர், கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
அதன்பின், கிருஷ்ணகிரி கலெக்டருடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், மறு உத்தரவு வரும் வரை திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களையும், உழவர்கள் சங்கத்தினரும் கலந்துகொள்ளாமல் திட்டப்பணிகள் எந்த விதத்திலும் தொடங்கப்படாது எனவும் உறுதி தரப்பட்டது.
இந்நிலையில், திட்டப்பணிகளை தொடங்க கலெக்டர் உத்தரவிட்டதாக கூறி, குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த உழவர்கள் திரண்டு அங்கு சென்று, குழிகளை மூடும் பணிகளை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, விளைநிலங்களில் இருந்து குழாய்களை அகற்ற வேண்டும்; இந்த திட்டத்தை புதியதாக அமைக்கப்படவுள்ள தர்மபுரி - ஓசூர் நான்கு வழி சாலை ஓரமாக நிறைவேற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.