ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி விசிக.,வினர் மனு
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விசிக.,வினர் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களாகிய 75 குடும்பங்களை சேர்ந்த நாங்கள், குடியிருக்கு வீடு இல்லாமல், ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களாக வசித்து வருகிறோம். அன்றாடம் கூலி தொழில் செய்துவரும் எங்களுக்கு சொந்தமான வீடோ, நிலமோ இல்லாமல், மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு நீண்ட நாட்கள் கோரிக்கை விடுத்து வந்தோம்.
இதையடுத்து, கோட்டையூரில் நாகராஜ், முத்துராமன், வரதராஜ் செட்டி ஆகியோரது 1.76 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அதற்கான தொகையும் அவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
மேலும், மேற்கண்ட இடம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததில் உரிய விசாரணை செய்து, பட்டா வழங்க கோரியும், 8 வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட எதிர் தரப்பினர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து செய்து கொண்டு, நிலத்தை விட மறுப்பதுடன், தகராறும் செய்து வருகின்றனர்.
எனவே ஏழை, தாழ்த்தப்பட்ட எங்கள் மீது கருணை கொண்டு அரசாங்கத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மேற்கண்ட நிலத்தை மீட்டு, வீடில்லாமல் தவிக்கும் எங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.