தங்க சிலையை எடுப்பதாக கூறி பண மோசடி : 5 பேர் கைது
தளி அருகே தங்க சிலையை எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே திப்பென அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி சாந்தம்மா 50, கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகள் யசோதம்மாவுடன்வாழ்ந்து வருகிறார்.
சாந்தம்மா கணவரை இழந்த நிலையில் அவரது தங்கையும் திருமணமாகாமல் உள்ளதால் குடும்பத்திற்கு தொடர்ந்து சோதனைகள் நடந்து வருவதாக அவரது தாய் யசோதம்மா கனவு கண்டதாக தெரிவித்து தனது அக்கா மகனிடம் கூறி பூஜை செய்ய ஏற்பாடு செய்தார்/
பூஜைக்காக திருப்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் 44, கர்நாடகா மாநிலம், சர்ஜாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், 24 தலைமையிலான மர்ம கும்பல் நேற்று சாந்தம்மா வீட்டிற்கு வந்தது.
வீட்டின் அடியில் 15 அடி ஆழத்தில் தங்க சிலை இருப்பதாகவும் அதை எடுத்து விட்டால் பிரச்சனை சரியாகி விடும் என கூறிய கும்பல் 55 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டது.
அதன் பின் பூஜை செய்வது போல் கோழி தலையை கடித்து எரிந்து விட்டு பில்லி சூனியம் வைக்க பயன்படுத்தும் பொம்மைக்கு பூஜை செய்த கும்பல் வீட்டிற்குள் தோண்ட துவங்கியது. 12 அடி தோண்டிய நிலையில் மீண்டும் 20 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் கேட்டது.
வீட்டிற்குள் இருந்து தொடர்ந்து சத்தம் வந்ததால் தளி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., கிருத்திகா, தளி போலீசார் அங்கு சென்று மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் சாந்தம்மா குடும்பத்தை ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து வெங்கடேசன், 44, சந்தோஷ்குமார்,கெலமங்கலத்தை சேர்ந்த முனிராஜ், 42, பெங்களூருவை சேர்ந்த கார்த்திக்குமார், 23, சர்ஜாபுரத்தை சேர்ந்த முனிராஜ், 52, ஆகிய ௫ பேரை தளி போலீசார் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்