12 கி.மீ. நடந்தே சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் - காரணம் இதுதான்

கிருஷ்ணகிரி மலைப்பகுதி கிராமங்களுக்கு 12 கி.மீ. நடந்தே சென்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினார்.

Update: 2021-07-27 08:07 GMT

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்திற்கு, பழங்குடியினரை சந்திக்க, நடந்தே சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் (வலது). 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நேற்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களை சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் இரவு தங்கிய அமைச்சர், இன்று காலை பெட்டமுகிலாலம் கிராமத்தில் இருந்து நடைபயணமாக 12 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

நடந்து செல்லும்போது வழியே உள்ள சிறுசிறு மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே சென்று, அவர்களின் வாழ்வாதாரம் தொழில் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மலைகிராம மக்கள் மருத்துவம் சாலை மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் போன்றவை பெறுவதில் சிரமம் இருப்பதாக அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அதனை மனுவாகவும் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்,  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு கிராம மக்களிடையே கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு, சிகிச்சை எடுத்துக் கொண்டது, தற்போதைய சூழல் குறித்து கேட்டறிந்தார்.

மலைகிராம மக்களிடம், தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.  பெட்டமுகிலாலம் மலை கிராமத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமூட்லு வரையில் 12 கிலோ மீட்டர் நடந்து சென்ற பிறகு, அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் பார்வையிட்டு அமைச்சர் மா.சுப்ரமணியன்,  பிறகு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள் நோய்த்தடுப்பு பணிகளை பார்வையிட சென்றார்.
Tags:    

Similar News